×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ்களில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்

ஊட்டி, டிச.16: நீலகிரியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தளங்கள் மற்றும் பஸ்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ அறிவுறுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் குன்னூர் இன்ட்கோ சர்வ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.

இன்ட்கோ சர்வ் தலைமை செயல் அலுவலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமை வகித்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக,  தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் ஏற்கனவே திறக்கப்பட்டது. பின்னர், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து சுற்றுலா தளங்களும் கடந்த 7ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா தளங்கள் திறப்பு மற்றும் பண்டிகைகள் தொடர்ந்து வரும் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்டாயமாக முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அணிந்துள்ளனரா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பஸ்களில் பயணம் செய்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனரா? என்பதையும் உறுதி செய்து, அணியாவிட்டால் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அனைவரும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். நம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கொரோனா தொற்று வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகு, தோட்டக்கலை உதவி இயக்குநர் பபிதா, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக மண்டல மேலாளர் வெங்கடாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : passengers ,
× RELATED சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து,...